ஓர் பரிசோதனையிலுள்ள மரபணுச் சிகிச்சையான டூச்சென் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான RGX-202 -இன் மருத்துவ ஆய்வு

 

டூச்சென் நோயாளிகளுக்கான எல்லைகளை விரிவுபடுத்துதல்

உங்கள் குழந்தைக்கு டூச்சென் இருக்கிறதா? தசைச் சிதைவைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட, பரிசோதனையிலுள்ள ஒரு புதிய மரபணுச் சிகிச்சையை ஆராயும் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வில் பங்கேற்க அவர்கள் தகுதி பெறலாம். 

உங்கள் குழந்தைக்கு டூச்சென் நோய் இருப்பது கண்டறியப்பட்டு, குறைந்தது ஒரு வயதுடையவராக இருந்தால், அவர் இந்த மருத்துவச் சோதனையில் பங்கேற்கத் தகுதியுடையவர்களாக இருக்கலாம். 

டூச்சென் ஆராய்ச்சி ஆய்வுக்கான உங்கள் குழந்தையின் சாத்தியமான தகுதியை மதிப்பிடுவதற்கு, 3 எளிய படிகள் உள்ளன:

1

தொடர்புப் படிவத்தை நிரப்பவும்.

நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ள உங்கள் தொடர்பு விவரங்களைப் பகிரவும்.

2

தகுதிச்சோதனைக்கு முந்தைய கேள்வித்தாளை நிரப்பவும்.

இந்த டூச்சென் ஆய்வுக்கு உங்கள் குழந்தை தகுதி பெறுகிறாரா என்பதை மதிப்பிடுவதற்கு ஒரு கேள்வித்தாளை நிரப்பவும். இந்த கேள்வித்தாளில் ஆய்வுக்கான அவரது ஆரம்பத் தகுதியை மதிப்பிடுவதற்குத் தேவையான குறைந்தபட்ச மருத்துவத் தரவு மட்டுமே சேகரிக்கப்படும்.

3

உங்கள் நோயாளி வழிகாட்டியைச் சந்தியுங்கள்.

தகுதிச்சோதனைக்கு முந்தைய கேள்வித்தாளில் வழங்கப்பட்ட பதில்களின் அடிப்படையில் உங்கள் குழந்தை தகுதி பெறும் வாய்ப்புள்ளவர் எனில், நீங்கள் ஒரு நோயாளி வழிகாட்டியுடன் இலவச அழைப்பைத் திட்டமிடலாம். இந்த டூச்சென் ஆய்வுக்கான உங்கள் குழந்தையின் தகுதிக்கான சாத்தியத்தை உங்கள் நோயாளி வழிகாட்டி மேலும் மதிப்பிடுவார். மேலும் சோதனைக்கான தகுதியை இறுதியில் தீர்மானிக்கும் ஓர் சோதனைத் தளத்துடன் இணைக்கத் தேவையான தகவல்களையும் உதவியையும் உங்களுக்கு வழங்குவார்.

1. பொதுவான கேள்விகள்

டூச்சென் என்றால் என்ன?

ச்சென் என்பது தசைகளைப் பாதிக்கும் ஒரு தீவிரமான வியாதி. இதனால் தசைகள் பலவீனமடைந்து காலப்போக்கில் மோசமடைகின்றன. டூச்சென் பாதிப்பு உள்ளவர்கள் நகர்தல் தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றனர். பொதுவாக தசை இழப்பு அதிகரிப்பதால் பதின்பருவத்தில் சக்கர நாற்காலியை நாட வேண்டியிருக்கும். நோய் அதிகரிக்கும்போது, அது சுவாசத் தசைகளையும் பாதித்து சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். இதயத் தசையும் பாதிக்கப்படலாம், இது இதயம் இரத்தத்தை திறம்பட பம்ப் செய்வதில் சிரமத்தை ஏற்படுத்துகிற கார்டியோமயோபதி எனப்படும் ஒரு நிலைமைக்கு வழிவகுக்கக் கூடும். 

முதன்மையாக உலகளவில் பிறக்கிற 5,000 ஆண் குழந்தைகளில் 1 குழந்தைக்கு டூச்சென் பாதிப்பு ஏற்படுகிறது, இது பெண்களை அரிதாகவே பாதிக்கிறது. அமெரிக்காவில், சுமார் 15,000 சிறுவர்கள் டூச்சென்னுடன் வாழ்கின்றனர், மேலும் உலகளவில் சுமார் 300,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

டூச்சென் எதனால் ஏற்படுகிறது?

டூச்சென் என்பது X குரோமோசோமில் அமைந்துள்ள டிஸ்ட்ரோபின் மரபணுவிற்குள் டிஎன்ஏவில் ஏற்படும் மாற்றங்களால் (பிறழ்வுகள்) ஏற்படும் ஒரு மரபணு நோய். இந்த மரபணு, தசைச் செல்களை அப்படியே வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் டிஸ்ட்ரோபின் புரதத்தை உற்பத்தி செய்கிற ஒன்று. போதுமான டிஸ்ட்ரோபின் இல்லாமல், தசைகள் படிப்படியாக சேதமடைந்து பலவீனமடைகின்றன.

டூச்செனுக்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?

 குளுக்கோகார்டிகாய்டுகள் பொதுவாக டூச்சென் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை சில நோயாளிகளுக்கு தசை வலிமை குறைவதை மட்டுப்படுத்தவும், ஸ்கோலியோசிஸ் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும், நுரையீரல் செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவலாம். இருந்தாலும், குளுக்கோகார்ட்டிகாய்டுகள் நோய்க்கான அடிப்படைக் காரணத்தைக் குணப்படுத்துவதில்லை அல்லது கடுமையான எலும்புக்கூடு மற்றும் இதயச் சிக்கல்களைத் தடுப்பதில்லை. மேலும் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அறிகுறிகளைக் கையாளவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் பிற ஆதரவு நடவடிக்கைகளும் உள்ளன. இவற்றில் உடல் சிகிச்சை, எலும்பியல் பராமரிப்பு, உதவிச் சாதனங்கள், இதயக் கண்காணிப்பு, சுவாச ஆதரவு ஆகியவை அடங்கும். 

கூடுதலாக, கடந்த சில ஆண்டுகளில் டூச்சென்னின் சிகிச்சைக்கு பல அணுகுமுறைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிகிச்சைகள் அவை இலக்காகக் கொள்ளும் குறிப்பிட்ட மரபணு மாற்றங்களைக் கொண்ட நபர்களுக்கானவை. 

மருத்துவச் சோதனை என்றால் என்ன?

மருத்துவச் சோதனைகள் என்பவை பரிசோதனையிலுள்ள சிகிச்சைகளின் பாதுகாப்பு, தாங்குதன்மை மற்றும் செயல்திறனை மதிப்பிடும் ஆராய்ச்சி ஆய்வுகள் ஆகும். நோயாளியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் சிகிச்சைகளை உருவாக்குவதில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும் அறிய எங்கள் வீடியோ பார்க்கவும். பொதுமக்களுக்கு சிகிச்சைகள் பாதுகாப்பானவை என்பதை உறுதி செய்வதற்கும், உகந்த சிகிச்சை முறைகளைத் தீர்மானிப்பதற்கும், சிறந்த சுகாதார விளைவுகளுக்காக நோய்கள் பற்றிய அறிவியல்பூர்வ அறிவை மேம்படுத்துவதற்கும் மருத்துவச் சோதனைகள் அவசியம். 

பரிசோதனையிலுள்ள மருந்து என்றால் என்ன?

பரிசோதனையிலுள்ள மருந்துஎன்ற சொல், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் ஐரோப்பிய மருந்துகள் முகமை (European Medicines Agency, EMA) போன்ற ஒழுங்குமுறை ஆணையங்களிடமிருந்து இன்னும் ஒப்புதல் பெறாத ஆராய்ச்சி நிலையிலுள்ள மருந்தைக் குறிக்கிறது. இதன் விளைவாக, இதை மருத்துவ ஆராய்ச்சி ஆய்வுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட முடியும். பொதுவான பயன்பாட்டிற்குக் கிடைக்காது. இந்த ஆய்வுகள், ஒரு பரிசோதனையிலுள்ள மருந்து பரவலான மருத்துவப் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 

மருத்துவச் சோதனைக்கான தகுதி அளவுகோல்கள் என்ன?

மருத்துவச் சோதனைகள் நோயாளிக்கான குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டுள்ளன. அவை மருத்துவச் சோதனைத் தகுதி அளவுகோல்கள் எனப்படும். யார் பங்கேற்கலாம் என்பதை இது தீர்மானிக்கிறது. இந்த அளவுகோல்கள், சோதனைப் பங்கேற்பு பொருத்தமற்றதாக இருக்கும் நபர்களைத் தவிர்த்து குறிப்பிட்ட அறிகுறிகள் அல்லது ஒரு குறிப்பிட்ட நோய் கண்டறியப்பட்ட நபர்களை அடையாளம் காண வடிவமைக்கப்பட்டுள்ளன. பிறழ்வு வகை மற்றும் நோய் வளர்ச்சி போன்ற ஒத்த பண்புகளையுடைய பங்கேற்பாளர்களைச் சேர்ப்பதன் மூலம், மருத்துவச் சோதனைத் தகுதி அளவுகோல்கள், சோதனையின் முடிவுகள் மதிப்பீடு செய்யப்படும் பரிசோதனையிலுள்ள மருந்தின் விளைவுகளைத் துல்லியமாக பிரதிபலிப்பதை உறுதி செய்கின்றன. மேலும், ந்த அளவுகோல்கள் சம்பந்தப்பட்ட பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 

மருத்துவச் சோதனைகள் ஏதேனும் அபாயத்தை ஏற்படுத்துமா?

மருத்துவச் சோதனைகளில் சிகிச்சையின் பக்க விளைவுகள், அறியப்படாத சிகிச்சை பலன், கூடுதல் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நேர ஒதுக்கீடுகள் போன்ற சாத்தியமான அபாயங்களைக் கொண்டுள்ளன. இவை கவனமாக மதிப்பிடப்பட்டுக் கண்காணிக்கப்படுகின்றன. ஆய்வின் நடத்தையை மதிப்பாய்வு செய்து அங்கீகரிக்கும் அறநெறிக் குழுக்களால் அபாயங்கள் மற்றும் பலன்கள் எடைபோடப்படுகின்றன. மருத்துவச் சோதனைகள் ஒரு குறிப்பிட்ட தரநிலைகளைப் பின்பற்றுவதுடன் அனைத்துப் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய கவனமாக ஒழுங்குபடுத்தப்படுகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தகவலறிந்த ஒப்புதல் செயல்முறைகள் பங்கேற்பாளர்கள் இந்த அபாயங்களைப் புரிந்துகொண்டு நிர்வகிக்க உதவுகின்றன. 

மக்கள் ஏன் மருத்துவச் சோதனைகளில் பங்கேற்கிறார்கள்?

மக்கள் வெவ்வேறு காரணங்களுக்காக மருத்துவச் சோதனைகளில் பங்கேற்கிறார்கள். சிலர் தங்கள் நோயைப் பற்றியும், புதிய சிகிச்சைகள் தங்கள் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றியும் மேலும் அறிய விரும்புவதால் பங்கேற்கலாம். எதிர்காலத்தில் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவக்கூடிய வகையில், ஒரு நோயைப் பற்றி (சிகிச்சையளிப்பது) ஆராய்ச்சியாளர்கள் மேலும் அறிந்துகொள்வதற்கு உதவ விரும்புவதால், மற்றவர்கள் இதில் பங்கேற்க முன்வருகிறார்கள். மற்றவர்கள் தற்போது தங்களுக்கு அல்லது எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு பயனளிக்கக்கூடிய, பரிசோதனையிலுள்ள புதிய மருந்துகளின் ஆராய்ச்சிக்கு தன்னார்வத்தோடு பங்களிக்கின்றனர். 

பங்கேற்பது தன்னார்வம் சார்ந்ததா?

ஆம். பங்கேற்பாளர்கள், அவர்களது பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்கள் விரிவான சோதனைத் தகவல்களைப் பெறுகிறார்கள். அவர்கள் கேள்விகள் கேட்கலாம்; சுதந்திரமாக முடிவெடுக்கலாம். தகவலறிந்த ஒப்புதல், அவர்கள் ஆய்வினைப் புரிந்துகொள்வதையும், பங்கேற்பாளர்களின் பராமரிப்பு அல்லது உரிமைகளைப் பாதிக்காமல் எந்த நேரத்திலும் விலகுவதையும் உறுதி செய்கிறது. 

இந்த ஆய்வில், மரபணுச் சிகிச்சை ஒரு முறை உட்செலுத்துதல் மூலம் வழங்கப்படும். மரபணுச் சிகிச்சையைப் பெற்ற பிறகு நீங்களோ அல்லது உங்கள் குழந்தையோ விலக முடிவு செய்தால், மரபணுச் சிகிச்சையை உடலில் இருந்து அகற்ற முடியாது. மரபணுச் சிகிச்சை காலப்போக்கில் உடலில் இருந்து நீங்கிவிடுவதில்லை. அதை மீட்டெடுக்கவும் முடியாது. 

நோயாளி வழிகாட்டி என்றால் என்ன?

myTomorrows-ல், ஒவ்வொரு நோயாளிக்கும், பெற்றோருக்கும் அல்லது பராமரிப்பாளருக்கும் ஒரு பிரத்தியேக நோயாளி வழிகாட்டியை நாங்கள் நியமிக்கிறோம். நோயாளி வழிகாட்டி சாத்தியமான ஆய்வுத் தகுதியை மதிப்பிடுவதிலிருந்து உங்கள் குழந்தையின் மருத்துவச் சோதனைக்கான ஆட்சேர்ப்பு பயணத்தின்போது உங்களிடம் இருக்கக்கூடிய கேள்விகளுக்கு பதிலளிப்பது வரை முழு செயல்முறையிலும் விரிவான ஆதரவை வழங்குகிறார். எங்கள் நோயாளி வழிகாட்டிகள் மருத்துவப் பின்னணியில் கைதேர்ந்தவர்கள். சிக்கலான மருத்துவக் கருத்துக்களை விளக்க பயிற்சி பெற்றவர்கள். இருந்தாலும், அவர்களால் மருத்துவ ஆலோசனை வழங்க முடியாது. ஒரு மருத்துவருக்கு மாற்றாக அவர்கள் பங்களிக்க முடியாது. எங்கள் நோயாளி வழிகாட்டிக் குழு, அனைத்து நேர மண்டலங்களையும் உள்ளடக்கிய நம்பகமான, பன்மொழி ஆதரவை வழங்குகிறது. பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த நோயாளிகளுடன் பயனுள்ள தகவல் தொடர்பு மற்றும் புரிதலை உறுதி செய்கிறது. 

நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு myTomorrows சேவைகள் இலவசமா?

ஆம், மருத்துவச் சோதனைகள் அல்லது பிற முன்ஒப்புதல் பெற்ற சிகிச்சைத் தெரிவுகள் மற்றும் அவற்றை எவ்வாறு அணுகுவது என்பது பற்றிய தகவல்களை வழங்கும் எங்கள் சேவைகள் எப்போதும் இலவசம். 

2. AFFINITY DUCHENNE® மருத்துவச் சோதனை பற்றி

AFFINITY DUCHENNE ஆய்வின் நோக்கம் என்ன?

இந்த ஆராய்ச்சியின் நோக்கம், டூச்சென் உள்ள சிறுவர்களுக்கு RGX-202 மரபணுச் சிகிச்சையின் ஒரு முறை நரம்பு வழியாக (IV) செலுத்தப்படும் மருந்தின் பாதுகாப்பு, சகிப்புத்தன்மை, மருந்து செயல்படும் விதம், மருந்துக்கான உடலின் எதிர்வினை, செயல்திறன் ஆகியவற்றை ஆய்வு செய்வதாகும். 

 

இந்த ஆய்வில் பரிசோதனையிலுள்ள எந்தச் சிகிச்சை ஆராய்ச்சி செய்யப்படுகிறது?

RGX-202 என்பது பரிசோதனையிலுள்ள மரபணுச் சிகிச்சையாகும். இது டூச்சென்னுக்கு ஒரு-முறைச் சிகிச்சையாக REGENXBIO -ஆல் உருவாக்கப்பட்டது. இது, NAV® AAV8 எனப்படும் Adeno-Associated Virus (AAV) நோய்ப் பரப்பியைப் பயன்படுத்தி, தசைச் செல்கள் ஒரு புதிய மைக்ரோடிஸ்ட்ரோபின் புரதத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை வழங்கும் ஒரு மாற்று மரபணுவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மைக்ரோடிஸ்ட்ரோபின் என்பது டிஸ்ட்ரோபினின் குறுகிய பதிப்பாகும். இது தசைகள் சரியாக வேலை செய்யத் தேவையான இயற்கையாக நிகழும் புரதமாகும். முழு நீள டிஸ்ட்ரோபினை உருவாக்கும் மரபணுச் சிகிச்சையை வழங்கும் AAV நோய்ப் பரப்பியில் பொருந்த முடியாத அளவுக்குப் பெரியதாக இருப்பதால், ஆராய்ச்சியாளர்கள் மரபணுச் சிகிச்சையில் மைக்ரோடிஸ்ட்ரோபின்களைப் பயன்படுத்துகின்றனர். 

மைக்ரோடிஸ்ட்ரோபின் புரதம் தயாரிக்கப்பட்டவுடன், அது தசைச் செயல்பாட்டைப் பாதுகாக்கக் கூடும். 

 

அனைத்துப் பங்கேற்பாளர்களும் பரிசோதனையிலுள்ள சிகிச்சையைப் பெறுவார்களா?

ஆம், மருத்துவ ஆராய்ச்சி ஆய்வில் உள்ள அனைத்துப் பங்கேற்பாளர்களும் பரிசோதனையிலுள்ள சிகிச்சையைப் பெறுவார்கள். 

இந்த ஆய்வில் யார் பங்கேற்கலாம்? 

தகுதியான பங்கேற்பாளர்கள் கண்டிப்பாக: 

  • ஆணாகவும் குறைந்தது ஒரு வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். 
  • மரபணு வகை மற்றும் மருத்துவ வெளிப்பாடுகளின் அடிப்படையில் டூச்சென் இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்க வேண்டும். 
  • 4 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நோயாளிகள் குறைந்தபட்சம் 100 மீட்டர் தூரம் அல்லது 1 முதல் 4 வயதுடைய நோயாளிகள் குறைந்தபட்சம் 10 மீட்டர் தூரம் துணைச் சாதனங்கள் இல்லாமல் சுயாதீனமாக நடக்கக் கூடியவர்கள். 
  • யாருடைய உதவியும் இல்லாமல் மல்லாந்து படுத்திருக்கும் நிலையிலிருந்து எழுந்து நிற்கும் திறன் கொண்டவராக இருப்பவர் (4 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நோயாளிகளில் 3 – 7 வினாடிகளுக்குள், 1 முதல் 4 வயது வரையிலான நோயாளிகளுக்கு கால வரம்பு இல்லை). 
  • குறைந்தது 10 கிலோ (22 பவுண்டுகள்) அல்லது அதற்கு மேற்பட்ட எடை. 
  • மரபணுச் சிகிச்சைக்கு (AAV8 புரத உறை) முன்பே இருக்கும் எதிர்மக்கூறுகள் இல்லாமல் இருக்க வேண்டும். மருந்தளிப்புக்கு முன் பங்கேற்கச் சாத்தியமுள்ளோர் சோதிக்கப்படுவார்கள். 
  • அவர் தனது வாழ்நாளில் எந்தவொரு ஆராய்ச்சியிலுள்ள அல்லது வணிகத்திலுள்ள மரபணுச் சிகிச்சைத் தயாரிப்பையும் பெற்றதில்லை. 

இதில் கூடுதல் தேவைகள் உள்ளன. அவை ஓர் சோதனைத் தளத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், பங்கேற்க ஆர்வமுள்ள தகுதியுள்ள நபர்களுடன் ஆய்வுக் குழு கலந்துரையாடும். 

ஆய்வு எங்கு நடத்தப்படுகிறது?

இந்த ஆய்வு தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் நடத்தப்படுகிறது. அமெரிக்கா/கனடா பகுதிக்கு வெளியே வசிக்கும் ஆர்வமுள்ள நோயாளிகள் தகுதிக்கான சாத்தியத்துக்கு மதிப்பீடு செய்யப்படலாம். ஆய்வுக்குத் தகுதியானவராகக் கருதப்பட்டால், உங்கள் குழந்தையின் சுமையைக் குறைக்க அவருக்கு அருகிலுள்ள சோதனைத் தளத்துடன் இணைக்கப்படலாம். உங்கள் குழந்தை பயணம் செய்ய வேண்டியிருந்தால், அவரது பங்கேற்பை எளிதாக்கும் வகையில் நியாயமான செலவுகள் மற்றும் உணவுச் செலவுகளை ஈடுகட்ட ஏற்பாடுகள் செய்யப்படலாம். உங்கள் குழந்தை இதைப் பெறுவதை உறுதிசெய்ய, சோதனைத் தளமும் நோயாளி ஏற்பாட்டுச் சேவையும் உங்களுடன் இணைந்து செயல்பட முடியும். 

ஆய்வின்போது நாங்கள் என்ன எதிர்பார்க்கலாம்?

RGX-202 –இன் ஒரு டோஸைப் பெற்ற பிறகு இந்த ஆய்வில் பங்கேற்பது தோராயமாக 2 ஆண்டுகள் நீடிக்கும். இந்த ஆய்வில் பின்வருவன அடங்கும்: 

  • தகவலறிந்த ஒப்புதல்:பெற்றோர்(கள்), சட்டப்பூர்வ பாதுகாவலர்(கள்) ஆக ஆய்வில் உங்கள் குழந்தை சேருவதால் ஏற்படும் சாத்தியமான அபாயங்கள் மற்றும் பலன்களை விளக்கும் தகவலறிந்த ஒப்புதல் படிவத்தை மதிப்பாய்வு செய்து கையொப்பமிடுமாறு உங்களிடம் கேட்கப்படும். இந்த ஆய்வில் உங்கள் குழந்தை பங்கேற்பதை நீங்கள் விரும்புகிறீர்களா என்பதைத் தீர்மானிக்க உதவுவதற்காக ஆய்வு மருத்துவர் இதை உங்களுடன் மதிப்பாய்வு செய்வார்.
  • தகுதிச்சோதனைக் காலம்: தகுதிச்சோதனையின்போது, தகுதியைத் தீர்மானிக்க சில மதிப்பீடுகள் மற்றும் சோதனைகள் செய்யப்படுகின்றன. இவற்றில் செயல்பாட்டுச் சோதனைகள், ஒரு MRI மற்றும் ஒரு தசை பயாப்ஸி ஆகியவை அடங்கும். ஆய்வுக் குழு உங்கள் குழந்தையின் உடல்நிலையை மதிப்பாய்வு செய்து, மருத்துவப் பதிவுகளைக் கோரக் கூடும். தகுதியைத் தீர்மானிப்பதற்கான செயல்முறைக்கு 2 மாதங்கள்வரை ஆகலாம். 
  • உட்செலுத்துவதற்கு முன்: RGX-202 என்ற பரிசோதனையிலுள்ள மருந்தைப் பெறுவதற்குமுன், சிகிச்சைக்கு நோயெதிர்ப்பு எதிர்வினையின் அபாயத்தைக் குறைக்க உங்கள் குழந்தை ஒரு முற்காப்பு நோயெதிர்ப்புத் தடுப்பு சிகிச்சையைப் பெறுவார். மருந்தளிக்கும் நடைமுறைக்கு முந்தைய நாள், உங்கள் குழந்தையின் தொடர்ச்சியான நல்ல ஆரோக்கியத்தையும் மருந்தளிப்புக்கான தகுதியையும் உறுதி செய்வதற்காக ஆய்வாளர் ஒரு மதிப்பீட்டை மேற்கொள்வார். 
  • உட்செலுத்துதல்: அனைத்துப் பங்கேற்பாளர்களும் RGX-202 –இன் ஒற்றை நரம்பு (IV) மருந்தளவைப் பெறுவார்கள். 
  • பின்தொடர்வு: 2 வருட பின்தொடர்வின்போது, உங்கள் குழந்தையின் உடல்நிலையைக் கண்காணிக்கவும், சிகிச்சை எவ்வாறு செயல்படக் கூடும் என்பதைக் காணவும் பல்வேறு பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகளை முடிக்கவும், அவர் சோதனைத் தளத்திற்கு பல முறை வருகை தருவார். 

AFFINITY DUCHENNE ஆய்வு தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பல ஆய்வு மையங்களில் ஆட்தேர்வு செய்கிறது.

உங்களுக்கு அருகில் எந்த சோதனைத் தளமும் இல்லை என்றாலும் உங்கள் குழந்தை இந்த ஆய்வில் பங்கேற்க முடியும். பயண ஏற்பாட்டுக்கான ஆதரவு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் கிடைக்கக் கூடும் 

எனக்கு அருகில் மருத்துவச் சோதனைத் தளம் உள்ளதா?

  • Study centers grouped together (> 10) ஒன்றாகத் தொகுக்கப்பட்ட ஆய்வு மையங்கள் (> 10)
  • Study centers grouped together (< 10) ஒன்றாகத் தொகுக்கப்பட்ட ஆய்வு மையங்கள் (< 10)
  • Study centers recruiting ஆய்வு மையங்களில் ஆட்சேர்ப்பு
  • Study centers preparing to recruit ஆய்வு மையங்களில் ஆட்சேர்ப்புக்குத் தயாராகுதல்

தயவுசெய்து படிக்கவும் - உங்கள் ஒப்புதல் தேவை

 

நீங்கள் டூச்சென் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோராகவோ, பராமரிப்பாளராகவோ இருந்தால் - அல்லது நீங்களே டூச்சென் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், பின்வரும் பக்கங்களில் நீங்கள் அல்லது உங்கள் குழந்தை (இனிமேல் 'பங்கேற்பாளர்' என்று குறிப்பிடப்படும்) இந்த டூச்சென் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வில் பங்கேற்கத் தகுதியுடையவரா என்பதைத் தீர்மானிக்க சில தகுதிச்சோதனைக்கு முந்தைய கேள்விகள் உள்ளன. தகுதிச்சோதனைக்கு முந்தைய ஏற்பாட்டில் பங்கேற்பாளர் பங்கேற்பதை நீங்கள் விரும்பினால், நீங்கள் சில தனிப்பட்ட மற்றும் மருத்துவத் தகவல்களை வழங்க வேண்டும். உங்கள் குழந்தை வயதுவராதவராக இருந்து, நீங்கள் அவர்களின் சார்பாகப் பதிலளிக்கிறீர்கள் என்றால், பின்வரும் பத்திகளில் உள்ள "நீங்கள்" மற்றும் "உங்கள்" என்ற தகவல்கள் உங்கள் குழந்தையின் தரவைக் குறிக்கின்றன.

 

இந்த ஆய்வின் ஸ்பான்சரான REGENXBIO Inc., உங்கள் தரவின் தரவுக் கட்டுப்பாட்டாளராகும். இந்த வலைத்தளத்தின் மூலம் ஆய்வுக்கான தகுதிச்சோதனைக்கு முந்தைய தகவல்களைச் சேகரிப்பதன் மூலம், ஆய்வுக்கான மருத்துவ ஆய்வின் ஆட்சேர்ப்புக்கு உதவுவதற்காக myTomorrows (“myTomorrows”, “நாங்கள்” அல்லது “எங்கள்”) -ஐ REGENXBIO Inc. ஈடுபடுத்தியுள்ளது.

 

பங்கேற்பாளர் ஆய்வுக்குத் தகுதியானவரா என்பதை மதிப்பிடுவதற்கு உதவ, உங்கள் ஒப்புதலுடன் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துவோம்.

 

தகுதிச்சோதனைக்கு முந்தைய கேள்விகளுக்குப் பதிலளித்த பிறகு, எங்கள் நோயாளி வழிகாட்டிகளில் ஒருவருடன் அழைப்பைத் திட்டமிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அவர்கள் இந்தச் சோதனைக்கான தகுதியை மதிப்பிடுவதற்கு பங்கேற்பாளரின் உடல்நலம் பற்றிய கூடுதல் தகவல்களையும், பொருந்தினால் பயணச் சாத்தியக்கூறுகள், இயலும்தன்மை மற்றும் முன்னுரிமைகள் பற்றிய தகவல்களையும் சேகரிப்பார்கள். இந்த ஆய்வுக்கு பங்கேற்பாளர் தகுதியுடையவராக இருக்கலாம் என்று நாங்கள் கண்டறிந்தால், உங்கள் ஒப்புதலுடன் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்களை மருத்துவச் சோதனைத் தளத்துடன் பகிர்ந்து கொள்வோம். தேர்வுசெய்த தள அமைவிடம் காரணமாக இந்தத் தகவல்களின் மொழிபெயர்ப்பு அவசியப்பட்டால், பங்கேற்பாளரின் மருத்துவ ஆவணங்களை சிறப்புவாய்ந்த மருத்துவ மொழிபெயர்ப்பு முகமையுடன் நாங்கள் பகிரக்கூடும். நீங்கள் சம்மதித்தால், பங்கேற்பாளரின் இருப்பிடம் மற்றும் தளத்திலிருந்து தூரத்தைப் பொறுத்து பயண ஏற்பாடுகள் மற்றும் கூடுதல் தளவாடத் தேவைகளுக்கு ஆதரவளிக்க தளம் ஒரு நோயாளி ஏற்பாட்டுச் சேவையைத் தொடர்பு கொள்ளலாம். இது தங்குமிடம் மற்றும் பயண ஏற்பாடுகளைப் பாதிப்பதாக இருந்தால், பங்கேற்பாளரின் தொடர்புத் தகவல் மற்றும் மருத்துவத் தகவல்களை (உதாரணமாக, இடப்பெயர்வுத் தேவைகள் போன்றவை) நோயாளி ஏற்பாட்டுச் சேவை பெறும்.

 

பங்கேற்பாளர் சோதனைக்குத் தகுதியுடையவராக இருக்கலாம் என்று நாங்கள் கண்டறிந்தால், அவரது தரவு சர்வதேச அளவில் மாற்றப்படும் (பங்கேற்பாளர் அமெரிக்காவிற்கு வெளியே வசிக்கிறார் என்றால்). இடமாற்றத்தின்போது அது போதுமானளவு பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய myTomorrows போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது.

 

பங்கேற்பாளர் இந்த ஆய்வுக்குத் தகுதி பெறாவிட்டாலும், பங்கேற்பாளருக்குக் கிடைக்கக்கூடிய பிற தெரிவுகள் பற்றி கலந்துரையாட எங்கள் நோயாளி வழிகாட்டிகளில் ஒருவருடன் ஒரு தொலைபேசி அழைப்பைத் திட்டமிடலாம்.

 

இந்தக் காலகட்டத்தில் பங்கேற்பாளருக்குக் கூடுதல் தெரிவுகள் கிடைக்கப் பெறுமாயின், உங்களைத் தொடர்பு கொள்வதற்காக பங்கேற்பாளரின் தரவை 2 ஆண்டுகளுக்கு நாங்கள் தக்கவைத்திருப்போம்.

 

பங்கேற்பாளரை அடையாளம் காணக்கூடிய தகவல்கள் REGENXBIO Inc. -உடன் பகிரப்படாது. அடையாளம் நீக்கப்பட்ட தரவு மட்டுமே REGENXBIO Inc உடன் பகிரப்படும்.

 

நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் ஒப்புதலை திரும்பப் பெறலாம். மேலும் உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெற்றவுடன், எங்கள் சட்டப்பூர்வக் கடமைகளுக்கு இணங்கத் தேவையானளவு தவிர, பங்கேற்பாளரின் தனிப்பட்ட தரவை உடனடியாக நீக்குவோம். உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், உங்கள் ஒப்புதலை திரும்பப் பெற விரும்பினால் அல்லது உங்கள் பிற தனியுரிமை உரிமைகளைப் பயன்படுத்த விரும்பினால், உங்களை நேரடியாக அடையாளம் காணக்கூடிய எந்தத் தகவலையும் REGENXBIO Inc. பெறாது என்பதால் தயவுசெய்து myTomorrows -ஐப் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்: dataprotection@mytomorrows.com REGENXBIO -இன் தனியுரிமைக் கொள்கை பற்றிய கூடுதல் தகவலுக்கு, privacy@regenxbio.com -ஐத் தொடர்பு கொள்ளவும் அல்லது https://www.regenxbio.com/privacy-policy/ -ஐப் பார்வையிடவும்.

myTomorrows உங்களைத் தொடர்பு கொள்வதற்கும் உங்கள் குழந்தை இந்த டூச்சென் சோதனையில் பங்கேற்கத் தகுதியுடையவரா என்பதை மதிப்பிடுவதற்கும் பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.